செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக்… ஆளுநருக்கு முதல்வர் விஜய் போட்ட அவசர தூது… முதல்வர் விஜய் எடுத்த விஸ்வரூப முடிவு…!

By Visaka on ஆனி 30, 2026

Spread the love

திமுக முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ‘விசாரணை அனுமதி’ கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு விஜய் தலைமையிலான தமிழக அரசு ஆளுநருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகள் தொடர்ந்துள்ள இந்த வழக்குகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, நிலுவையில் உள்ள இக்கோப்புகளை விரைந்து பரிசீலித்து உரிய அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் மூலம் ஆளுநர் மாளிகைக்கு முறைப்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், இந்த இரு பெரும் தலைவர்கள் மீதான பிடி இறுகுவது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் திருப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இதில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் (2011-2016) போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறை அவரை அதிரடியாகக் கைது செய்தது. இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கும் குற்றப்பத்திரிகையை இறுதி செய்வதற்குமான விசாரணை அனுமதி கோப்பு நீண்ட நாட்களாக ஆளுநர் மாளிகைக்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையே சுழன்றுகொண்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் 15-ம் தேதி அமலாக்கத்துறை இதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையை ரகசிய குறிப்புகளுடன் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்தக் கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரை அரசு வலியுறுத்தியுள்ளது.

   

மற்றொருபுறம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கும் அமலாக்கத்துறையின் பிடியில் தீவிரமடைந்துள்ளது. 2001-2006 காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை 2020-ல் வழக்கைத் தொடங்கி, அவரது குடும்பத்தினரின் பல கோடி மதிப்புள்ள 18-க்கும் மேற்பட்ட அசையா சொத்துகளை ஏற்கனவே முடக்கியுள்ளது. புதிய பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாசட்டப்பிரிவு 218-ன் கீழ், கடிதம் கிடைத்த 120 நாட்களுக்குள் மாநில அரசு முடிவெடுக்காவிட்டால் அந்த அனுமதி ‘வழங்கப்பட்டதாகவே கருதப்படும்’ என்ற கடுமையான சட்ட விதியை அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த 120 நாட்கள் கெடு நெருங்கி வருவதால், இக்கோப்பையும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி விரைந்து முடிக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.