முதலமைச்சர் பதவிக்கே அவமானம்…! பிரதமர் சொன்னது திமுகவினரை… தமிழக மக்களை அல்ல…. அண்ணாமலை எக்ஸ் பதிவு வைரல்…!!

By Devi Ramu on ஐப்பசி 31, 2025

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்யும் போது தமிழ்நாட்டில் கடுமையாக உழைக்கும் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று கூறினார். அதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் “பிரதமர் மோடி தன் நாட்டில் உள்ள அனைவருக்கும் பிரதமர் என்ற பொறுப்பை அடிக்கடி மறந்து விடுகிறார்.

இதுபோன்ற பேச்சுக்களால் தனது பதவிக்கான மாண்பை இழக்கக்கூடாது. தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும் அற்ப அரசியலை நிறுத்திவிட்டு நாட்டின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்” என கூறியிருந்தார்.

   

இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ₹888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin.

   

உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.

 

முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.

எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் அவர்கள் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, திரு மு.க ஸ்டாலின் அவர்கள் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.