“நான் ஒன்னும் சமரசம் ஆகல…” அமெரிக்கா மண்ணில் இருந்து அண்ணாமலை வீசிய ‘அரசியல் குண்டு’… திமுக எம்பி-க்கு எதிராக அண்ணாமலை ஆடிய ‘மைண்ட் கேம்’…!

By Visaka on ஆடி 7, 2026

Spread the love

பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் “வி தி லீடர்ஸ்” (We The Leaders) அமைப்பின் தலைவருமான அண்ணாமலைக்கும், திமுக எம்பியும் அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலுவுக்கும் இடையே நிலுவையில் இருந்த பரஸ்பர அவதூறு வழக்குகள் அண்மையில் வாபஸ் பெறப்பட்டன. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் பின்னணி குறித்து, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற வி தி லீடர்ஸ் அமைப்பின் அறிமுகக் கூட்டத்தில் அண்ணாமலை விரிவான விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2023-ல் அண்ணாமலை வெளியிட்ட ‘DMK Files’ பட்டியலில், டி.ஆர்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 10,000 கோடி சொத்து சேர்த்ததாகக் குற்றம் சாட்டியதை அடுத்து இந்த அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. பின்னர், குறுக்கு விசாரணையின் போது அண்ணாமலை மீதும் டி.ஆர்.பாலு ஊழல் புகார் கூற, அவரும் டி.ஆர்.பாலுவுக்கு எதிராகப் பதில் வழக்குத் தொடர்ந்தார். இறுதியில் இருவரும் வழக்குகளைத் தொடர விரும்பவில்லை என மனுத் தாக்கல் செய்ததால், நீதிமன்றம் வழக்குகளை முடித்து வைத்தது.

இந்த விவகாரத்தில் அண்ணாமலை திமுகவுடன் சமரசம் செய்து கொண்டுவிட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு அவர் தற்போது மறுப்புத் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலுவே முன்வந்து வழக்கை வாபஸ் பெற்றதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, “வழக்குப் பதிவு செய்தவரே அதை வாபஸ் வாங்கும்போது, அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் யாரைப் பற்றி என்ன பேசினேனோ அது அனைத்தும் உண்மை, தொடர்ந்து ஊழலுக்கு எதிராகப் பேசுவேன்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று உறுதியாகக் கூறியுள்ளார். தான் யாருடனும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றும், ஊழலுக்கு எதிரான தனது போராட்டம் தனிப்பட்ட முறையில் தொடரும் என்றும் அவர் அந்த மேடையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

   

இதே கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்தும் அண்ணாமலை தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். எந்தவொரு புதிய அரசு அமைந்தாலும் அவர்கள் திறம்படச் செயல்படக் குறைந்தது ஓராண்டாவது கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் கொடுத்து ஆதரிப்போம் என்றார். தவெக தமிழகத்திற்கு நல்லது செய்யும் பட்சத்தில், அதை முதல் ஆளாக நாம் எப்போதும் வரவேற்கப் போவதாகவும், அவர்களின் செயல்பாடுகளுக்குத் முட்டுக்கட்டை போடக் கூடாது என்றும் அண்ணாமலை பேசியுள்ளார்.