உத்தரப் பிரதேச மாநில பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலப் பொதுச்செயலாளரும், முன்னாள் மாநில அமைச்சருமான 55 வயதான நானக் ராம் பூர்ஜி, லக்னோவில் உள்ள தாருல் சஃபா புதிய எம்.எல்.ஏ குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஹஸ்ரத்கஞ்ச் காவல்துறையினர், படுகாயமடைந்த அவரை மீட்டு உடனடியாகச் சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தவறி விழுந்ததா அல்லது அவராகக் குதித்தாரா என்பது குறித்துப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த சில நாட்களாகக் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்வு ஆய்விற்காக அனுப்பி வைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
