“ஸ்டாலின் நினைத்தால் நீங்கள் அவ்வளவுதான்!”.. தவெக அரசுக்கு அதிமுக மாஜி அமைச்சர் அக்ரி விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

By Muthu Mani on ஆனி 8, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள சூழலில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் ரீதியான கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. “பேப்பரில் மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர், ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் தவெகவில்தான் இருக்கிறார்கள்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்த கருத்து, அதிமுகவினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தற்போது தங்களது கடுமையான எதிர்வினைகளை ஆற்றி வருகின்றன.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி பழனிசாமியைப் பற்றிப் பேசுவதற்கு அமைச்சருக்கு எந்தவித தார்மீகத் தகுதியும் இல்லை என்று சாடியுள்ளார். மேலும், அதிமுகவில் 2 கோடியே 16 லட்சம் தொண்டர்கள் உள்ளதாகவும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி 1 கோடியே 35 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், தங்களுக்குப் பொதுமக்களின் அங்கீகாரமே போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

   

தொடர்ந்து தவெக அரசின் ஆயுட்காலம் குறித்துப் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திமுகவின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இந்த அரசு, மு.க.ஸ்டாலின் விரும்பும் வரை மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்று விமர்சித்துள்ளார். ‘விரைவில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதை நினைவூட்டிய அவர், பொதுமக்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரின் கணிப்புப்படி இந்த ஆட்சி 6 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று தெரிவித்துள்ளார்.

   

நேற்றைய தினம் எடப்பாடியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆட்சியாளர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்து, 6 மாத காலத்திற்குள் இந்த ஆட்சி தூக்கி எறியப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனைச் சுட்டிக்காட்டிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திமுக ஆதரவுடன் கையேந்தி நடக்கும் இந்த தவெக ஆட்சி 6 மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும் என்பதுதான் தற்போதைய நிதர்சனமான உண்மை என்று தனது பேட்டியில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.