தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் கடந்த 2011-21 அதிமுக ஆட்சியின்போது, சுமார் 109 ஏக்கர் அரசு நிலத்தை முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்ததாகப் பெரியகுளம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் அன்னபிரகாஷ், அவரது உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது தேனி குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அன்னபிரகாஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த நிலமோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினரும் அவர் மீது தனியாக வழக்குப் பதிந்து கைது செய்த நிலையில், தற்போதும் இந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், தற்போது ஜாமீனில் இருக்கும் அன்னபிரகாஷ், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து அக்கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தார். ஊழல் மற்றும் நிலமோசடி வழக்குகளில் சிக்கிய ஒருவரைத் தவெகவில் இணைத்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகத் தேனி மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்னபிரகாஷின் இந்த அரசியல் மாற்றம் குறித்து விமர்சித்துள்ள தேனி அதிமுகவினர், அவர் மீதான நிலமோசடி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். சட்டத்தின் பிடியில் இருந்தும், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்தும் தவெகவின் மூலம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற சுயநல எண்ணத்திலேயே அவர் கட்சியில் இணைந்துள்ளதாகவும், ஊழல் வழக்கில் கைதானவரைச் சேர்த்துக் கொண்டதன் மூலம் தவெக ஒரு தீயசக்தி என்பதை நிரூபித்துள்ளதாகவும் சாடியுள்ளனர். மேலும், அன்னபிரகாஷின் முறைகேடுகள் அனைத்தையும் அதிமுக தொடர்ந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அவருக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
