தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் நீக்கப்படுவதும் அவர்களாகவே கட்சியிலிருந்து விலகுவதும் என கடந்த சில நாட்களாகவே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கூட செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்து பயணித்து வருகின்றார்.
இப்படியான நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். சிங்காநல்லூர் தொகுதியில் 2006, 2011 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவான இவர், அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் இருந்துள்ளார். 2026 தேர்தலில் கோவையில் அமோக வெற்றியை குறிவைத்து அதிமுக முக்கிய தலைவர்களை திமுக தங்கள் வசம் இழுத்து வருகிறது. இதனால் இபிஎஸ் தரப்பினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதனிடையே இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் உழைப்பவர்களுக்கு இடம் இல்லை என்று கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி குற்றம் சாட்டியுள்ளார். சமூக ரீதியாக சாதகமான நபர்களை வைத்து இபிஎஸ் செயல்படுவதாகவும், தன் மீது அதிமுகவினர் பொய் வழக்கு போட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தலைமையின் மீது உள்ள அதிருப்தியால் திமுகவில் இணைந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
