பெண்களுக்கு 40 வயதைக் கடக்கும்போது வளர்சிதை மாற்றம் குறைந்து தசை வலிமை பலவீனமடையத் தொடங்கும். இந்தச் சூழலில் புரதச்சத்து நிறைந்த உணவுகளைத் அன்றாடம் உட்கொள்வது உடல் வலிமையையும் ஹார்மோன் சமநிலையையும் சீராக வைக்க உதவும். ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கொண்ட முட்டை, எலும்பு உறுதிக்கும் தசைச் சீரமைப்பிற்கும் மிகச்சிறந்த உணவாகும். அதேபோல், செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தயிரையும், சோர்வைப் போக்கி இரும்புச்சத்தை அதிகரிக்கப் பருப்பு வகைகளையும் பெண்கள் தங்களின் தினசரி உணவுப் பட்டியலில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தசை வளர்ச்சியைப் பராமரிக்கவும் மூட்டுவலியைத் தவிர்க்கவும் கால்சியம் நிறைந்த பனீர் மற்றும் சுண்டல் போன்றவற்றைச் சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளை விரும்புவோர் கொழுப்பற்ற கோழி இறைச்சி அல்லது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகளைச் சாப்பிடுவது இதயம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பளிக்கும். 40 வயதிற்குப் பிறகு ஏற்படும் உடல் சோர்வு மற்றும் தசை இழப்பைத் தடுத்து, சுறுசுறுப்பாக இயங்க இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அத்தியாவசியமானவை என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
