நீதிமன்ற விமர்சனம் ஒன்றிலிருந்து நையாண்டியாக உருவான ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP), இந்திய இளைஞர்களின் தற்போதைய சமூக-அரசியல் குமுறலின் வெளிப்பாடாக மாறியுள்ளது. வேலைவாய்ப்பின்மை, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சினைகளால் ஏற்கனவே கொந்தளிப்பில் இருந்த இளைஞர்களை, “கரப்பான்பூச்சிகள்” என்ற அந்த வார்த்தை வெகுவாகக் காயப்படுத்தியது. இதன் விளைவாக, தங்களை ஒடுக்க நினைக்கும் அதிகார அமைப்பிற்கு எதிராக சமூக ஊடகங்களில் இந்த நையாண்டி இயக்கம் தொடங்கப்பட்டது. குறுகிய நாட்களிலேயே இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) தளங்களில் கோடிக்கணக்கான இளைஞர்கள் இதில் இணைந்தனர். எந்தளவிற்கு எனில், இன்ஸ்டாகிராமில் பாஜவை விட சிஜேபியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் எக்ஸ் பக்கம் திடீரென முடக்கப்பட்டாலும், புதிய பக்கங்கள் உருவாக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் ஆதரவோடு இந்த இளைஞர் இயக்கம் தொடர்ந்து வலுபெற்று வருகிறது.
இந்தியாவைத் தொடர்ந்து அண்டை நாடான பாகிஸ்தானிலும் இதேபோன்றதொரு அலை வீசத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் விரக்தியடைந்துள்ள இளைஞர்கள், அங்கு ‘கரப்பான்பூச்சி அவாமி லீக்’ என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளனர். “அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரையெல்லாம் கரப்பான்பூச்சிகளாகக் கருதி புறக்கணிக்கிறார்களோ, அவர்களின் குரலாக நாங்கள் ஒலிப்போம்” என்று பிரகடனப்படுத்தி, அந்நாட்டு இளைஞர்கள் தங்களின் அதிகாரத்திற்கு எதிரான குரலை இதன் மூலம் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இரு நாடுகளிலும் உருவெடுத்துள்ள இந்த ‘கரப்பான்பூச்சி அரசியல்’ போக்கு, தெற்காசிய இளைஞர்களிடையே நிலவும் தீவிரமான வேலைவாய்ப்பின்மையையும், அரசு அமைப்புகளின் மீதான அவர்களின் நம்பிக்கையற்ற தன்மையையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. வெறும் நையாண்டியாகவும், மீம்ஸ் (Memes) கலாச்சாரமாகவும் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இன்று எல்லைகளைத் தாண்டி அதிகார வர்க்கத்திற்கு எதிரான ஒரு வலுவான விவாதப் பொருளாகவும், இளைஞர்களின் உரிமைக் குரலாகவும் உருவெடுத்துள்ளது உற்றுநோக்கத்தக்கது.
