நேபாளத்தின் திபெத் எல்லைப் பகுதியில் உற்பத்தியாகும் போட்டே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பேரழிவு காட்டாற்று வெள்ளம் அப்பகுதியை நிலைகுலையச் செய்துள்ளது. வெள்ளப் பெருக்கு காரணமாக ராசுவா மாவட்டத்தில் சுற்றுலா மேற்கொண்டிருந்த சுமார் 384 பேரில், 105 இந்தியர்கள் உட்பட 291 வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், வெள்ளத்தில் சிக்கிய 111 சுற்றுலாப் பயணிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இக்கடும் வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் பலர், அங்குள்ள நேபாள பாதுகாப்புப் படை முகாம்களில் பாதுகாப்பாகத் தஞ்சம் அடைந்துள்ளனர். இருப்பினும், திமூர் மற்றும் சியாப்ரு ஆகிய பகுதிகளில் நிலவும் வெள்ளத்தின் தீவிரத்தால் சாலைகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு, அப்பகுதிக்கான சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசமான காலநிலை காரணமாக ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழர்கள் உள்ளிட்ட இந்திய யாத்ரீகர்களை மீட்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.
நேபாளம் மற்றும் திபெத் இடையேயான முக்கிய எல்லை வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பகுதிகளில் மாட்டிக்கொண்ட பல இந்திய யாத்ரீகர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. எல்லைப் பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவாக மீட்கவும், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவும் இரு நாட்டு அதிகாரிகளும் தீவிர மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
