10 நிமிட டீ பிரேக்… மரணத்தின் வாயிலில் இருந்து தப்பிய 5 இந்தியர்கள்… நேபாளத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

By Gayathri on ஆவணி 31, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற ஐந்து நபர்கள், தற்செயலாக ஒரு தேநீர் கடையில் நின்றதால் பெரும் வெள்ள அபாயத்தில் இருந்து நூலிழையில் உயிர் பிழைத்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி வாடகை காரில் பயணம் மேற்கொண்ட இவர்கள், பயணத்தின் ஐந்தாவது நாளில் தாடிங் மாவட்டத்தின் மலேகு பகுதியில் தேநீர் அருந்துவதற்காக தங்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியில் எதிர்பாராத விதமாக பயங்கர வெள்ளம் ஏற்பட்டதைக் கண்டு மக்கள் அலறியடித்து ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஒருவேளை அவர்கள் சில நிமிடங்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ அந்த இடத்தைக் கடந்திருந்தால், நிச்சயம் அந்த கோர வெள்ளத்தில் சிக்கி பெரும் ஆபத்தை சந்தித்திருப்பார்கள்.

பயணத்தை தொடர முடியாத சூழலில், வேறு வழியின்றி அந்த ஐந்து பேரும் தங்களது வாகனத்திலேயே இரண்டு நாட்கள் அச்சத்துடன் தங்கியிருந்து வெள்ளத்தின் சீற்றத்தை நேரில் பார்த்துள்ளனர். இந்த நெருக்கடியான தருணத்தில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் பெண்கள் ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு அவர்களுக்கு ராக்கி கயிறு கட்டியது பெரும் மன அமைதியையும் ஆறுதலையும் அளித்துள்ளது. இயற்கைச் சீற்றத்தின் கோரப்பிடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர்கள் அனைவரும், மீட்புக் குழுவினரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு தங்களது சொந்த ஊருக்கு சமீபத்தில் பாதுகாப்பாகத் திரும்பினர்.