சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பயணிகள் மத்தியிலும் ரயில்வே வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட நந்திகிராம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 11002) ரயிலின் முதல் வகுப்பு ஏசி கூபே (AC Coupe) பெட்டி ஒன்று, சொகுசு ஹோட்டலின் ‘ஹனிமூன் சூட்’ போல பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அறையின் கூரையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்கள், இருக்கைகளில் ரோஜா இதழ்களால் ஆன இதய வடிவம், படிக்கட்டுகளில் செயற்கை விளக்குகள் மற்றும் படுக்கையில் “ஐ லவ் யூ” என்ற எழுத்துக்கள் என ஒரு திருமண வரவேற்பு அறை போலவே அது மாற்றப்பட்டிருந்தது.
இந்த விசித்திரமான அலங்காரத்தை, ரயிலில் பயணித்த புதுமணத் தம்பதியினர் ஆன்லைன் மூலமாக ஒரு தனியார் டெக்கரேஷன் நிறுவனத்தை ஏற்பாடு செய்து செய்துள்ளனர். ரயில் ஜல்னா நிலையத்திற்கு வந்தபோது, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நபர் எந்தவித முன் அனுமதியும் இன்றி ரயிலுக்குள் நுழைந்து இந்த வேலைகளை முடித்துள்ளார். அலங்காரம் செய்யப்பட்ட இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமே சமூக வலைத்தளங்களில் பெருமையுடன் பகிர, அது நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி, ரயில்வே நிர்வாகத்தின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியது.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பயணிகள் ரயில்வே நிர்வாகத்தை டேக் செய்து கேள்வி எழுப்பியதை அடுத்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தனது எக்ஸ் (X) தளத்தில் அளித்துள்ள விளக்கத்தில், “இது பாதுகாப்பு விதிமுறைகளை முற்றிலும் மீறிய ஒரு அஜாக்கிரதையான செயலாகும். இதற்குப் பொறுப்பான, அலட்சியமாகச் செயல்பட்ட ரயிலின் டிக்கெட் பரிசோதகர் (TTE) உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று அறிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டிக்குள் தம்பதியினர் செய்த இந்த காதல் அசாத்தியம் சமூக வலைத்தளங்களில் சிலரால் வேடிக்கையாகப் பேசப்பட்டாலும், பெரும்பாலான நெட்டிசன்கள் ரயில்வேயின் பாதுகாப்புக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு தனியார் நபர் ரயிலுக்குள் நுழைந்து, இவ்வளவு பெரிய டெக்கரேஷனைச் செய்து முடிக்கும் வரை அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறையை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.
