“விளக்கேற்றிய போது நேர்ந்த அற்புதம் அல்ல.. ஆபத்து!… பழமையான ஆலமரத்தில் மளமளவென பரவிய தீ… அலறியடித்து ஓடிய பெண்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ”…!!

By Muthu Mani on வைகாசி 17, 2026

Spread the love

திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்தின் நலனுக்காகவும், கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும் பல்வேறு விரதங்களை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் வட மாநிலங்களில் பெண்களால் மிகவும் பக்தி சிரத்தையுடன் கடைப்பிடிக்கப்படும் ஒரு முக்கிய விரதம் ‘வட் சாவித்ரி விரதம்’ ஆகும். ஜேஷ்ட அமாவாசை தினத்தில் பெண்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து, பழமையான ஆல மரத்தடியில் விளக்கேற்றி, சாவித்ரி தேவியை பூஜை செய்து வழிபடுவார்கள். இந்த ஆண்டிற்கான ஜேஷ்ட அமாவாசை தினமான நேற்று, வட மாநிலங்கள் முழுவதும் ஏராளமான பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவின் பதுகா தாலுகாவில் உள்ள மிக பழமையான ஆல மரத்தடியில் நடைபெற்ற பூஜையின் போது, எதிர்பாராத விதமாக அந்த மரம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏராளமான பெண்கள் ஒன்றுகூடி ஆல மரத்தடியில் விளக்கேற்றி பூஜை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விளக்கிலிருந்து புறப்பட்ட நெருப்புப் பொறி, விரத வழிபாட்டின் ஒரு பகுதியாக மரத்தைச் சுற்றி கட்டப்பட்டிருந்த காட்டன் (பருத்தி) நூலில் பட்டுள்ளது. மரத்தைச் சுற்றி மிக நெருக்கமாகவும், அதிக அளவிலும் நூல் சுற்றப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

   

மரத்தின் காய்ந்துபோன விழுதுகள் மற்றும் கிளைகளிலும் தீ வேகமாகப் பரவியதால், பயந்துபோன பெண்கள் அலறியடித்தபடி அந்த இடத்தைவிட்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது எதிர்மறையான கருத்துக்களைப் பதிவிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “ஒரு நிமிடத்திற்கு முன்புதான் தங்களுக்கு ஆசி வேண்டி அந்தப் பழமையான மரத்தை வழிபட்டார்கள்; ஆனால், அது தீப்பற்றி எரியும்போது அணைக்க முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” எனப் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.