மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள வணிகக் கட்டிடத்தின் மாடியில் திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அந்தேரி மேற்கு ஓஷிவாரா பகுதியில் அமைந்துள்ள பிரபல மஹேஸ்வரி பவன் கட்டிடத்தின் மாடியில் இன்று திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவெனப் பற்றி எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டது.
தகவலறிந்ததும் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புப் படையினர், தீவிரமாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இதுவரை எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
