” 33 பந்துகளில் 100 ரன்கள்”.. பவுண்டரி, சிக்சர்களில் தெறிக்கவிட்ட நியூசிலாந்து வீரர்… ரோகித், கோலி சாதனையை தூள் தூளாக்கிய ஃபின் ஆலன்… மிரண்டு போன கிரிக்கெட் உலகம்….!

By Nanthini on பங்குனி 5, 2026

Spread the love

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், வெறும் 33 பந்துகளில் சதம் விளாசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஃபின் ஆலனின் இந்த அதிரடி இன்னிங்ஸ் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக 2017-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 33 பந்துகளில் 100 ரன்களை எட்டிய ஃபின் ஆலன், 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களை பறக்கவிட்டு தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.

   

சாதனைப் பட்டியலில் ரோகித் சர்மாவை மட்டுமல்லாது, விராட் கோலியின் சாதனையையும் ஃபின் ஆலன் பின்னுக்குத் தள்ளியுள்ளார். டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் இதன் மூலம் வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டு அரையிறுதியில் விராட் கோலி எடுத்த 89 ரன்கள் மற்றும் தில்ஷன் எடுத்த 96 ரன்கள் ஆகியவற்றைத் தாண்டி, ஃபின் ஆலன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

   

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் மற்றும் டிம் சைபர்ட் (58 ரன்கள்) ஜோடி மிரட்டலான தொடக்கத்தைத் தந்தது. நியூசிலாந்து அணி வெறும் 12.1 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இந்த அசுர வேக வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.