ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்தி ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் ஏ. மீனாட்சி சுந்தரத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.48 லட்சத்திற்கான காசோலையை வீரருக்கு வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது மீனாட்சி சுந்தரத்தின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்
https://twitter.com/urstrulySRN/status/2066413887449383084/video/1
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், கடந்த 2024 டிசம்பரில் தென் காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு தேடுதல் வேட்டையின் போது, முகம் மற்றும் வலது தோள்பட்டையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும் பின்வாங்காமல் வீரத்துடன் சண்டையிட்டார். தனது கடுமையான காயத்தையும் பொருட்படுத்தாமல், மிக நெருக்கமான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதியை நேருக்கு நேர் சுட்டுக் கொன்று தன் குழுவினரின் உயிரைக் காப்பாற்றினார். இவருடைய இந்த மிக உயரிய தியாகத்தையும் அசாதாரண வீரத்தையும் பாராட்டி, நாட்டின் இரண்டாவது மிக உயரிய அமைதிக்கால விருதான [கீர்த்தி சக்ரா] விருதை அண்மையில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
