கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மாங்காவு பகுதியில் அரசு விரைவுப் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்துமாறு நடத்துநரிடம் (கண்டக்டர்) கேட்டுள்ளார். ஆனால், அங்கு முறையான பேருந்து நிறுத்தம் இல்லாததால் நடத்துநரும், அதைத் தொடர்ந்து ஓட்டுநரும் (டிரைவர்) அங்கு பேருந்தை நிறுத்த மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களைத் தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அவர், பேருந்தின் அவசரகாலப் பெட்டியில் இருந்த சுத்தியலை எடுத்து, ஓட்டுநர் இருக்கைக்கு அருகிலிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்ததால் பேருந்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து அரசுப் பேருந்து பணிமனை மூலம் கசபா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சேதமடைந்த பேருந்தைப் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண், “ஆத்திரத்தைக்கூட அடக்கலாம், ஆனால் இயற்கை உபாதையை அடக்க முடியாது” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார். தனக்குக் கடுமையான அவசரம் ஏற்பட்டதன் காரணமாகவே பேருந்தை நிறுத்தக் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் வேறு வழியின்றி ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்துவிட்டதாகவும் விளக்கமளித்தார்.
மேலும், தனது செயலுக்குப் போலீசாரிடம் மன்னிப்பு கோரிய அந்தப் பெண், சேதமடைந்த ஜன்னல் கண்ணாடிக்கான நஷ்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணிடமிருந்து போக்குவரத்து கழகத்திற்குச் சேதக் கட்டணமாக ₹28,000 நஷ்டஈடு பெறப்பட்டு, போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த வினோதமான சம்பவத்தைப் பேருந்திலிருந்த பயணிகள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர, தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
