அரியானா மாநிலம் பரிதாபாத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய எதிர்ப்புப் பேரணியின் போது, இரு பெண் தலைவர்கள் இடையே நடுரோட்டில் பயங்கர கை கலப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டிவாலி தரம்சாலாவில் இருந்து பத்வாரி கோயில் நோக்கி மாநில காங்கிரஸ் தலைவர் பேர்ல் சௌத்ரி மற்றும் மாவட்ட தலைவர் பல்ஜீத் கௌசிக் தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது.
பேரணியின் போது, காங்கிரஸ் கட்சியின் பேனரைப் பிடித்துக்கொண்டு சென்ற பலப்கர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பராக் சர்மாவுக்கு முன்னால் செல்ல மற்றொரு பெண் தலைவரான கஜ்னா லம்பா முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, பராக் சர்மா கஜ்னாவின் கன்னத்தில் அறைய, பதிலுக்கு கஜ்னாவும் அவரைத் தாக்கியுள்ளார். இருவரும் நடுரோட்டில் மாறி மாறி அறைந்து கொண்டு சண்டையிட்டதை அடுத்து, சக தொண்டர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி விலக்கி விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது ஒரு சாதாரணச் சம்பவம், கூட்டத்தில் கை பட்டு விட்டது என மாவட்டத் தலைவர் சமாளிக்க முயன்றது மேலும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.
