கேரள மாநிலத்தில் போதைப்பொருள் தடுப்புக்கான ‘ஆபரேஷன் தூஃபான்’ சோதனையின் போது பிடிபட்ட ரிஸ்வான் என்பவரிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் பள்ளி ஆசிரியைகள் இருவர் இருப்பது அம்பலமானது. இதன் அடிப்படையில், சர்வசிக்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றி வந்த காவ்யா மற்றும் அவரது தோழியான கீர்த்தனா ஆகிய இரு ஆசிரியைகளையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் கியூ ஆர் கோட் மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, போதைப்பொருள் இருக்கும் இடத்தின் லொகேஷனை அனுப்பி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பெருந்தொகையைக் காவ்யாவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதும், அந்த பணத்தில் அவர் விலையுயர்ந்த ஆடம்பரக் கார் வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பணி இருந்ததால், ஆசிரியர் பணியை ஒரு போர்வையாகப் பயன்படுத்திக் கொண்டு இவர்கள் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவ்விருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
