பாரதத்தில் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் புகழ்பெற்ற ஒன்றான ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கரில் உள்ள பாபா வைத்யநாத் தாம் கோவிலில், பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த போலி பாபா ஒருவனை பெண் சிஆர்பிஎஃப் கமாண்டோ அதிகாரி சாதுரியமாகப் பிடித்துள்ளார். ஆன்மீக நம்பிக்கை கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்லும் இந்த புனித தலத்தில், உருவமாறி பாபா வேடமிட்டு உலா வந்த நபரை அங்கிருந்தவர்கள் கவனித்ததும், அவன் உஷாராகி தப்பியோட முயன்றுள்ளான்.
அவனைப் பிடிக்க ஜார்க்கண்ட் மாநிலக் காவல் துறையினர் முயற்சித்தும் பலனில்லாமல் போன நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண் சிஆர்பிஎஃப் கமாண்டோ உடனடியாகச் செயல்பட்டு ஓடிய நபரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கூண்டில் அடைத்துள்ளார். பெண் கமாண்டோவின் இந்தத் துணிச்சலான மற்றும் உடனடி நடவடிக்கை அங்கிருந்த பக்தர்களாலும் அதிகாரிகளாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
புனிதமான தலங்களில் ஆன்மீகப் போர்வையில் பக்தர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்திப் பணத்தை கொள்ளையடிக்கும் இது போன்ற போலி பாபாக்கள் மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகளை அரசு மற்றும் காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
