ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள என்டிபிசி கூலிங் கால்வாயில், பெண் ஒருவரின் உடற்பாகங்கள் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இச்சம்பவம் தொடர்பாக போலிஸார் உடற்பாகங்களைக் கைப்பற்றி, அந்தப் பெண்ணின் கையில் இருந்த டாட்டூ புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்தப் பதிவைப் பார்த்த ஒரு நபர், உயிரிழந்தவர் மங்களகிரியைச் சேர்ந்த கல்யாணி என்ற தனது சகோதரிதான் என்பதை உறுதி செய்துள்ளார்.
கடந்த 17 ஆம் தேதி மங்களகிரியில் வைத்து கல்யாணி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இப்ராஹிம்பட்டினம் கால்வாயில் வீசப்பட்டிருக்கலாம் என போலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலிஸார் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கல்யாணியின் செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், கடைசியாக அவர் யாருடன் பேசினார் என்ற விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
இக்கொடூரக் கொலை தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்துப் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது பணப் பிரச்சினை காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் போலிஸார் விசாரித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்தக் கொடூரக் கொலையின் பின்னணியில் உள்ள முழு உண்மையும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
