ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை, விஷம் கலந்த மீன் குழம்பு கொடுத்து கொடூரமாக கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (65). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த சண்முகவேலு என்பவரின் மனைவி முருகவள்ளி (45), அதே ஊரைச் சேர்ந்த இளையராஜா (40) என்பவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இவர்களின் கள்ளத்தொடர்பை கருப்பையா பலமுறை கண்டித்ததால், ஆத்திரமடைந்த முருகவள்ளி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தந்தையைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இரவு மீன் குழம்பில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து தந்தை கருப்பையாவுக்குக் கொடுத்துள்ளார். ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிக்கல் காவல்துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு முருகவள்ளி மற்றும் இளையராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பரமக்குடி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து மகள் முருகவள்ளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இவ்வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாததால் இளையராஜா விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
