புது தில்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் பொறியாளராகப் பணிபுரியும் 36 வயதான உர்வி, கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு பொறியாளரைத் திருமணம் செய்துகொண்டார். ஒரு பெண் குழந்தை இருந்தபோதிலும், கடந்த எட்டு ஆண்டுகளாகத் தனது மாமியார் வீட்டின் வரதட்சணைக் கொடுமைகளையும், உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் நள்ளிரவில் தனது தந்தை அனில் குமாருக்கு போன் செய்து கதறி அழுதபோது, “இனியும் அங்கிருக்க வேண்டாம், உடனே கிளம்பி வா… நாங்கள் இருக்கிறோம்” என அவர் கொடுத்த ஒற்றைத் தைரியம் உர்வியின் வாழ்க்கையை மாற்றியது.
இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகாலத் துஷ்பிரயோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்த உர்வி, விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து சட்டப்பூர்வமாகப் பிரிந்தார். விவாகரத்து பெற்றுத் திரும்பிய தனது மகளை ஊர் உலகம் என்ன சொல்லும் என்று அனில் குமார் அஞ்சவில்லை. மாறாக, திருமணத்தின் போது எப்படி மேளதாளங்களுடன் மகளைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தாரோ, அதேபோல் மிகுந்த மரியாதையுடனும், மேளதாளங்கள் முழங்கவும் உற்சாகமாகத் தனது வீட்டிற்கு உர்வியை மீண்டும் வரவேற்றார். பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் பணிபுரியும் அனில் குமார், தனது மகள் மீண்டும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே இந்தச் சிறப்பான வரவேற்பை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்தார்.
“சகித்துக்கொள்” என்று சொல்லி மகள்களை மரணத்திற்குத் தள்ளும் பெற்றோருக்கு மத்தியில், தந்தை அனில் குமாரின் இந்தச் செயல் ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான வித்தாக அமைந்துள்ளது. வரதட்சணைக் கொடுமையால் மகள்கள் பெட்டியில் அடைக்கப்பட்ட உயிரற்ற உடலாகத் திரும்புவதை விட, விவாகரத்து பெற்றிருந்தாலும் மகிழ்ச்சியுடன் உயிருடன் நம் கண்முன்னே இருப்பதே மேலானது என்பதை இந்தத் தந்தை உலகுக்கு உணர்த்தியுள்ளார். புகுந்த வீட்டில் நரகத்தை அனுபவிக்கும் பெண்களுக்குத் தந்தை வீட்டு வாசல்கள் எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்பதற்கு டெல்லியில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
