விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளை சொந்தத் தந்தையே நள்ளிரவில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, “சின்னவளை முடிச்சிட்டேன்டா” எனத் தம்பிக்கு போன் செய்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த சிவசாஸ்திரி (40) என்ற லாரி டிரைவரின் இளைய மகள் விகாஷினி (14), கரசானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி வேறு ஒரு இளைஞரைக் காதலித்து வந்ததைக் கண்டித்த பெற்றோர், படிப்பில் கவனத்தை செலுத்துமாறு பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், தாயார் வேலூருக்குச் சென்றிருந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மூத்த மகளைப் பக்கத்து வீட்டிலுள்ள சித்தப்பா வீட்டிற்குத் தூங்க அனுப்பிவிட்டு, சிவசாஸ்திரி மகளிடம் காதலைக் கைவிடுமாறு மீண்டும் கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடிக்கவே, ஆத்திரமடைந்த சிவசாஸ்திரி சிறுமி விகாஷினியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். உடனடியாகத் தனது தம்பிக்கு போன் செய்து “சின்னவளை கழுத்தை நெரிச்சி போட்டுட்டேன்” எனத் தகவல் தெரிவித்துள்ளார். பதறியடித்து ஓடிவந்த தம்பி, சிறுமியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றபோதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வானூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சொந்த மகளையே கொன்ற தந்தை சிவசாஸ்திரியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
