“உன் பசங்கள கொன்றுவிடுவேன்”… 12 வயது மகனின் கண்களைத் தோண்டி கொடூரமாக கொன்ற வளர்ப்பு தந்தை…. டெல்லியில் பயங்கரம்….!

By Nanthini on தை 31, 2026

Spread the love

தலைநகர் டெல்லியில் 12 வயது சிறுவன் அவனது வளர்ப்புத் தந்தையாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அவரது இரண்டாவது கணவர் வஜித் என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்தப் பெண்ணின் முதல் கணவருக்குப் பிறந்த மூன்று மகன்களையும் விடுதியில் சேர்க்குமாறு வஜித் வற்புறுத்தியதாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது “உன் மகன்களைக் கொலை செய்துவிடுவேன்” என்று அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், பள்ளிக்கூடம் சென்ற ஏழாம் வகுப்பு மாணவனான அல்தமாஷ் (12) மாலை வீடு திரும்பவில்லை. அவனைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், வஜித் அந்தச் சிறுவனின் மூத்த சகோதரனுக்குத் தொடர்பு கொண்டு, தான் அல்தமாஷைக் கொலை செய்துவிட்டதாகவும், அவனது உடலை காட்டுப் பகுதியில் எடுத்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். பதறியடித்துச் சென்ற குடும்பத்தினர், சாலையோரப் புதரில் சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

   

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டும், கைகள் உடைக்கப்பட்டும் மிகக் கொடூரமான முறையில் வஜித் தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்தது. ஏற்கனவே குடும்ப வன்முறை புகாரின் பேரில் வஜித் மீது வழக்கு இருந்த நிலையில், அந்தப் பெண்ணின் மன்னிப்பால் அவர் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள கொலையாளி வஜித்தைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.