விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே உள்ள சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு திருமணம் ஆகி பாலமுருகன் என்ற மகனும் ஐஸ்வர்யா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்களும் உள்ளன. இதனிடையே 24 வயதுடைய பிரியங்கா நர்சிங் படித்து விட்டேன் எல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது பிரியங்கா தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கூறியதால் அவரின் காதலுக்கு பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் வீட்டுக்கு செல்ல விருப்பமில்லை என கூறிய பிரியங்காவை விருதுநகரில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர். அதனால் ஆத்திரமடைந்து காப்பகத்திற்குச் சென்ற பிரியங்காவின் தந்தை ரமேஷ் மற்றும் அண்ணன் பாலமுருகன் ஆகியோர் அவரிடம் சமாதானம் பேசி வீட்டுக்கு அழைத்துள்ளனர். பிறகு அவர்கள் மூன்று பேரும் காரில் புறப்பட்டு ரமேஷின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்றனர்.
ரமேஷ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் பிரியங்காவை தனி அறையில் வைத்து பூட்டி, நாங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடியாதா, குடும்பத்தை அசிங்கப்படுத்திய நீ உயிருடன் இருக்கக் கூடாது என்று கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். பிரியங்காவின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் மற்றும் அவருடைய அண்ணன் பாலமுருகனை கைது செய்தனர். திருமணத்திற்கு மறுத்த மகளை தந்தை மற்றும் சகோதரர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
