திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள நூதன்பஜார் காவல் எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், 80 வயது முதியவர் ஒருவர் தனது மருமகளைக் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொடுமை தாங்காமல் அவரது மகன் கடந்த வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டின் கூரையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மகன் இறந்து சில மணி நேரம் கழித்து முதியவர் மீண்டும் மருமகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மகனின் மரணத்திற்குக் காரணமான முதியவரின் இந்த அசிங்கமான செயலை அறிந்து ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த முதியவரைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்துக் காலணி மாலை அணிவித்து ஊர் முழுவதும் அவமானப்படுத்தி, ஒரு கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நூதன்பஜார் போலீசார், காயமடைந்த முதியவரை மீட்டுச் சிகிச்சைக்காகப் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முதியவரின் கொடுமையால் தான் அவரது மகன் உயிரிழந்தார் என்று கிராம மக்கள் கையெழுத்திட்ட மனுவை போலீசாரிடம் ஒப்படைத்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலிருந்து முறையான சட்டப்பூர்வப் புகார் ஏதும் வரவில்லை என்றும், அதிகாரப்பூர்வப் புகார் கிடைத்தவுடன் அடுத்தகட்டக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
