உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த வாலிபர்களைக் காதலித்த காரணத்திற்காக இரு மகள்களைத் தந்தையும் சகோதரர்களும் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. பிப்ராகாட் கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவரது மகள்களான லாலி (20) மற்றும் ஷீலா (18) ஆகிய இருவருமே இந்த ஆணவக் கொலைக்கு இரையாகியுள்ளனர். ஐந்தாம் வகுப்புடன் கல்வி நிறுத்தப்பட்ட இந்த சகோதரிகள் இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்களைக் காதலித்து வந்த நிலையில், சமூக வேறுபாட்டைக் காரணம் காட்டி அவர்களது குடும்பத்தினர் இந்த காதலுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, இந்த சகோதரிகள் கடந்த காலங்களில் மூன்று முறை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஒவ்வொரு முறையும் தந்தை கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அவர்களை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் காதலர்களுக்கே திருமணம் செய்து வைக்குமாறு அறிவுறுத்தியும் ராம்பிரசாத் அதற்கு உடன்படவில்லை. இதற்கிடையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான்காவது முறையாக வீட்டை விட்டு வெளியேறிய பெண்களை, இந்த முறை போலீசாரிடம் செல்லாமல் தந்தையும் மகன்களும் சேர்ந்து தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இனி காதலர்களுடன் பேசக் கூடாது என்று குடும்பத்தாரும் ஊர்ப் பஞ்சாயத்தும் எச்சரித்த நிலையிலும், இரு பெண்களும் தொடர்ந்து தொடர்பில் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தச் சூழலில், கடந்த ஜூன் 8-ஆம் தேதி நள்ளிரவில் லாலியும் ஷீலாவும் தங்களது காதலர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை ராம்பிரசாத் நேரில் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகன்களுடன் சேர்ந்து மகள்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே, இரு பெண்களையும் ஒரு அறைக்குள் பூட்டி வைத்த மூவரும், கட்டைகள் மற்றும் லத்திகளால் அவர்களை இரக்கமின்றித் தாக்கியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த லாலியும் ஷீலாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குற்றத்தைச் செய்த உடனே தந்தையும் மகன்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து கிராமக் காவலாளர் கொடுத்த தகவலின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் வர்மா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இக்கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராம்பிரசாத்தின் இரு சிறு வயது மகன்களைப் போலீசார் பிடித்து விசாரித்து வரும் நிலையில், தலைமறைவாக உள்ள தந்தை ராம்பிரசாத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சொந்தக் குருதி என்றும் பாராமல், சாதி வெறியினாலும் கௌரவக் கொலை என்ற போர்வையினாலும் இரு இளம் பெண்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
