கொலம்பியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் நாற்காலிகள் மற்றும் கம்புகளுடன் மைதானத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமையன்று பொகோடாவில் உள்ள எல் காம்பின் மைதானத்தில் ‘இன்டிபென்டியன்டே சாண்டா ஃபே’ மற்றும் ‘அமெரிக்கா டி காலி’ ஆகிய கிளப் அணிகளுக்கு இடையே இந்த போட்டி நடைபெற்றது. போட்டியின் 33-வது நிமிடத்தில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில், திடீரென மைதானத்தில் இருந்த ரசிகர்களிடையே பெரும் மோதல் வெடித்து வன்முறையாக மாறியது.
ரசிகர்கள் மூர்க்கத்தனமாக மோதிக்கொண்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால், அதிர்ச்சியடைந்த வீரர்களும் உதவி ஊழியர்களும் பாதுகாப்பிற்காக உடனடியாக ஓய்வறைக்குள் தஞ்சம் புகுந்தனர். நிலைமை கைமீறிப் போனதையடுத்து, கலகத் தடுப்பு போலீசார் அதிரடியாக களமிறங்கி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இந்த பயங்கர கலவரத்தால் போட்டி சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. நிலைமை சீரடைந்த பிறகு மீண்டும் தொடங்கிய இந்த ஆட்டத்தில், இறுதிவரை எந்த அணியும் கோல் அடிக்காததால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
இந்த கலவரத்தின் போது, மைதானத்தில் கீழே விழுந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ‘அமெரிக்கா டி காலி’ அணியின் கோல்கீப்பர் ஜீன் பெர்னாண்டஸ் தலையில் ரசிகர் ஒருவர் உதைத்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பெரிய தாக்குதலுக்குப் பிறகும் போட்டியைத் தொடர்ந்து நடத்திய அதிகாரிகளின் முடிவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மைதானத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய இந்த வன்முறைச் சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதன் முடிவில் இரு அணிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
