விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. தனுஷ் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியைப் பதிவுசெய்துள்ளதாகவும், சிவகார்த்திகேயன் பின்னணியில் ஆளுங்கட்சி இருப்பதாகவும் தகவல்கள் பரவி வரும் நிலையில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் அவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்களைக் கேள்வி கேட்க முதுகெலும்பு இல்லாத இவர்கள், ரசிகர் மன்றக் கூட்டம் கூட்டி சாப்பாடு போடுவதை மட்டுமே அரசியல் எனக் கூறுவதாக விமர்சித்துள்ளார். மேலும், “இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் சர்வதேசப் பள்ளிகளில் படித்து ஹீரோவாகி விடுவார்கள்; மற்ற வீட்டுப் பிள்ளைகள் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து காலத்திற்கும் அடிமைகளாகவே இருக்கப் போகிறீர்களா?” எனக் காட்டமாக கேள்வி எழுப்பி இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
