நெல்லை மாவட்டம் தருவையை சேர்ந்த பாலமுருகன் (34) என்ற கட்டிட தொழிலாளி கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கோவை கணபதியை சேர்ந்த ஸ்ரீபிரியா (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒன்றரை வயதில் மகள் உள்ளனர். பாலமுருகன் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் சொந்த ஊரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சியாக சென்ற வாழ்க்கை கள்ளக்காதல் காரணமாக திசை மாறியது. ஸ்ரீபிரியா விற்கும் பாலமுருகனின் உறவுக்கார வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனை அறிந்த பாலமுருகன் தன்னுடைய மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ஸ்ரீப்ரியா தன்னுடைய குழந்தைகளுடன் கோவைக்கு வந்தார். பிறகு குழந்தைகளை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு காந்திபுரத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியுள்ளார். நேற்று காலை இங்கு வந்த பாலமுருகன் தன்னுடைய மனைவியை சந்தித்து பேசியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் பாலமுருகன் ஸ்ரீபிரியாவை அறிவாளால் வெட்டி கொன்றார். மேலும் உயிரிழந்த மனைவியின் உடலின் அருகே அமர்ந்து செல்ஃபி புகைப்படம் மூலம் எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கோவையில் கட்டிட வேலை பார்த்தபோது கணபதியை சேர்ந்த ஸ்ரீ பிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். எங்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்த நிலையில் என் மனைவிக்கும் என்னுடைய உறவுக்கார வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது பற்றி அறிந்து என்னுடைய மனைவியை கண்டித்தும் அவர் கேட்காததால் எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு என் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். நான் அடிக்கடி என் மனைவிக்கு போன் செய்து நாம் சேர்ந்துவிடலாம் என்று கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார் . என் மனைவி கோவைக்கு சென்று விட்டதால் அவரையும் குழந்தைகளையும் ஆறு மாதமாக பார்க்க முடியாமல் இருந்தேன். இதனிடையே என் மனைவியும் அவருடன் பழகி வந்த வாலிபரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று எனக்கு வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கு சென்ற பிறகும் இது தொடர்வதை நினைத்து வருந்தினேன். மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து ஆறு மாதம் ஆகிவிட்டதால் மனைவியை சந்தித்து பேசி சமாதானப்படுத்தி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்து கோவைக்கு வந்தேன்.
நான் தனியாக சென்றால் பார்க்க மறுத்து விடுவார் என்பதால் கணபதியில் உள்ள என்னுடைய மாமா ராஜா என்பவரையும் அழைத்துக் கொண்டே என் மனைவி தங்கி இருக்கும் விடுதிக்கு சென்றேன். என் மனைவி வந்ததோ அவரிடம் நாம் இனிமேல் சண்டை போடாமல் மகிழ்ச்சியாக வாழலாம் என்னுடன் வந்துவிடு, சொந்த ஊருக்கு செல்லலாம் என்று கூறினேன். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் நான் எவ்வளவு சொல்லியும் என் மனைவி என் பேச்சை கேட்காததால் ஆத்திரம் அடைந்து கழுத்தில் வெட்டி கொன்று விட்டேன். அவர் உயிரிழந்ததை உறுதி செய்துவிட்டு உறவினர்களுக்கு தெரிவிப்பதற்காக தான் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தேன் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் பகுதியில் பெயரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
