“மந்திரமும் இல்லை, மாயமும் இல்லை”… 600 ரூபாய் தைலம்,12-ஆம் வகுப்பு படிப்பு… ஊரையே ஏமாற்றிய ‘உருட்டு’ வைத்தியர்…. கம்பி எண்ணும் பாண்டி…..!

By Nanthini on தை 20, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புத்தூர் கட்டு வைத்தியம் என்ற பெயரில் முறையான மருத்துவ அங்கீகாரம் இன்றி கிளினிக் நடத்தி வந்த பாண்டி என்பவர், சுகாதாரத்துறையினரின் அதிரடி சோதனையில் கைது செய்யப்பட்டார். சமூக வலைத்தளங்களில் தனது சிகிச்சை முறைகளை நேரலையாக ஒளிபரப்பி பிரபலமான இவர், எலும்பு முறிவு மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு ‘உருட்டு வைத்தியம்’ செய்து வந்துள்ளார். இவரது சிகிச்சையின் உண்மைத்தன்மை குறித்து எழுந்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தேவக்கோட்டை சப்-கலெக்டர் வெங்கட் வட்ஸ் தலைமையில், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் பாண்டியின் வீடு மற்றும் கிளினிக்கில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அங்கு எவ்வித மருத்துவ சான்றிதழ்களும் இன்றி சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், எந்தவித அறிவியல் ஆதாரமும் இன்றி “மந்திரம் இல்லை, மாயம் இல்லை” என்று கூறி, சுமார் 200 மி.லி தைலத்தை 600 ரூபாய்க்கு பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தைலத்தின் தரம் மற்றும் தயாரிப்பு முறை குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

   

பொதுமக்கள் தங்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முறையான கல்வித் தகுதியும், அரசு அங்கீகாரமும் பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். போலியான விளம்பரங்களை நம்பி தங்களின் ஆரோக்கியத்தைச் சிதைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், இது போன்ற அங்கீகரிக்கப்படாத மருத்துவ மையங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. கைதான பாண்டி மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.