நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி டைட்டிலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் வருகிற 10ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் விளம்பர காட்சியில் சிவாஜியின் வாரிசாக சிவகார்த்திகேயன் சித்திரிக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனமும் விமர்சனமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, பராசக்தி என்ற பெயரில் மீண்டும் படம் தயாரிப்பதற்கு ஆரம்பத்திலேயே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் ரசிகர்களின் வேண்டுகோள் மற்றும் எதிர்ப்பை புறந்தள்ளிய நிலையில் அதே பெயரில் பராசக்தி என திரைப்படம் தயாராகி வெளிவர உள்ளது.
ஏற்கனவே வேதனையில் உள்ள எங்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, தீ பரவட்டும் என்று நடிகர் திலகம் சிவாஜியிடம் இருந்து தீப்பந்தத்தை சிவகார்த்திகேயன் பெறுவது போல பராசக்தி படத்திற்கு விளம்பரம் செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. நடிகர் திலகத்தின் வாரிசுகளாக பிரபு, விக்ரம் பிரபு இன்றும் தமிழ் சினிமாவில் உள்ளனர்.
அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயனை நடிகர் திலகத்தின் வாரிசு என்கிற ரீதியில் விளம்பரப்படுத்திக் கொள்ள யார் அதிகாரம் அனுமதி கொடுத்தது. பராசக்தி படத்தின் பெயரை அபகரித்தது மட்டுமின்றி நடிகர் திலகத்தின் பெயரையும் புகைப்படத்தையும் வணிக நோக்கத்திற்காக, சுய லாபத்திற்காக பயன்படுத்துவதை நடிகர் திலகத்தின் ஆன்மா மன்னிக்காது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் மத்தியில் சர்ச்சையாக மாறியுள்ளது.
