பஞ்சாப் மாநிலம் பாசில்லா மாவட்டத்தில் உள்ள ஜண்ட்வாலா மீரா சங்லா கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான சரோஜ் என்ற பெண், தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து விவாகரத்து பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் சேர்ந்து வாழலாம் என ஆசை வார்த்தை கூறி, குர்மீத் அவரைச் சந்திக்க அழைத்துள்ளார்.
அவரைச் சந்திக்கச் சென்ற சரோஜ், குர்மீத்துடன் இணைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ‘ரீல்ஸ்’ வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில் பின்னணியில் சோகப் பாடல் ஒலிக்க, குர்மீத் வெற்றிச் சின்னத்தைக் காட்டிச் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். ஆனால், அந்த வீடியோவை பதிவு செய்த சில நிமிடங்களிலேயே, புதர்கள் நிறைந்த ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்குச் அழைத்துச் சென்று, கூர்மையான ஆயுதத்தால் சரோஜை குர்மீத் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு தடயங்களை மறைக்க உடலை மண்ணில் புதைக்க முயன்றபோது, அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபர் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு ஓடிவந்துள்ளார். நபர் வருவதைக் கண்ட குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் சரோஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த முன்னாள் கணவர் குர்மீத் சிங்கை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
