ரூ.10,000 சம்பள பாக்கி… ரூ.24 கோடியை சாம்பலாக்கிய அக்கவுண்டன்ட்…. குஜராத்தில் அரங்கேறிய பயங்கரம்….!

By Nanthini on புரட்டாதி 23, 2026

Spread the love

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில், கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவில் திடீரெனப் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். எனினும், அடுத்தடுத்த கடைகளுக்குத் தீ வேகமாகப் பரவியதால், 4 வணிகர்களுக்குச் சொந்தமான 17 கடைகளில் இருந்த ரூ.24 கோடி மதிப்பிலான ஜவுளிகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வணிக வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முகத்தைத் துணியால் மூடியபடி சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபரைக் கண்டறிந்தனர். தீவிர விசாரணையில், அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வினோத் சாவ்லி (33) என்பதும், தீவிபத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ஹனுமன் பிரசாத் ஜவாரின் கடையில் கணக்காளராகப் பணியாற்றி சமீபத்தில் விலகியவர் என்பதும் தெரியவந்தது.

   

காவல்துறையினரின் பிடியில் சிக்கிய வினோத் சாவ்லி, தனக்கு நேரலைக்கப்பட்ட அநீதிக்குத் தண்டனையாகவே இச்செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றிய அவரை, உரிமையாளரும் மூத்த கணக்காளரும் துன்புறுத்தியதால் வேலையை விட்டு விலகியுள்ளார். அப்போது, அவருக்குத் தர வேண்டிய ரூ.10 ஆயிரம் நிலுவைச் சம்பளத்தைக் கேட்டுப் பலமுறை அலைந்தும் உரிமையாளர் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.

   

இதனால் ஆத்திரமடைந்த வினோத், உரிமையாளருக்குப் பணத்தின் அருமையைப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகப் பெட்ரோல் வாங்கி வந்து குடோனில் தீ வைத்துள்ளார். தனது முன்னாள் முதலாளியின் கடையை மட்டுமே எரிக்க நினைத்ததாகவும், தீ அருகிலிருந்த கடைகளுக்கும் பரவும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இச்சம்பவத்திற்குப் பின் காசி, அயோத்தி எனத் தப்பியோடியவர், கையில் வைத்திருந்த பணம் தீர்ந்ததும் சூரத் திரும்பியபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.