388 ரன்கள் டார்கெட்… தசைபிடிப்போடு லார்ட்ஸை கதறவிட்ட ரோகித் சர்மா… ’51 ஆண்டுகளுக்கு பிறகு ‘… கிரிக்கெட் உலகத்தை அதிரவிட்ட சர்மா…!

By Visaka on ஆடி 22, 2026

Spread the love

இங்கிலாந்துக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவது ஒருநாள் போட்டியில், 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி போராடி தோல்வியடைந்தாலும், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான சதம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. கேப்டன் சுப்மன் கில்லுடன் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 147 ரன்கள் சேர்த்த ரோகித், ஆரம்பத்தில் நிதானம் காட்டி பின்பு அதிரடிக்கு மாறினார். தசைபிடிப்பால் அவதிப்பட்ட நிலையிலும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு 110 பந்துகளில் 138 ரன்கள் விளாசி, தனது 34-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் மூலம் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், 51 ஆண்டு கால ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் 2004-இல் சவுரவ் கங்குலி அடித்த 90 ரன்களே இங்கு ஒரு இந்தியரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. மேலும், 39 வயது 80 நாட்களில் இச்சதத்தை அடித்ததன் மூலம், இந்திய அணிக்காக மிக அதிக வயதில் ஒருநாள் சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் (38 வயது 327 நாட்கள்) இவர் முறியடித்துள்ளார்.

   

ஃபார்ம் அவுட் காரணமாக லார்ட்ஸ் போட்டியோடு ரோகித் சர்மா ஓய்வு பெறப்போவதாக உலா வந்த வதந்திகளுக்கு இந்த இன்னிங்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில், “ரோகித் சர்மா ஓய்வு குறித்து அணியிடம் எதுவும் கூறவில்லை; ஊடகங்களில் தான் இதுபற்றி பேசப்படுகிறது தவிர, அணிக்குள் அதுபோன்ற எந்த விவாதமும் நடக்கவில்லை” என தெளிவுபடுத்தினார். இதன் மூலம் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவதும், 2027 உலகக்கோப்பை வரை களத்தில் நிற்பதில் அவர் உறுதியாக இருப்பதும் தெளிவாகியுள்ளது.