ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. போக்குவரத்து சேவைகள் பாதிப்பு, மின்சாரத் தேவையில் திடீர் உயர்வு, மருத்துவ அவசரநிலை எச்சரிக்கைகள் என ஐரோப்பாவே திணறி வருகிறது. சர்வதேச ஊடகங்களின்படி, குறிப்பாக பிரான்சில் இந்த வெப்ப அலையின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில், ஜெர்மனியில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் டென்னிஸ் ராக்கெட்டின் கைப்பிடி உருகியது போன்ற காட்சிகளும், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மின்விசிறி வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் உலக அளவில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த வீடியோக்களைப் பகிர்ந்து வரும் இந்திய நெட்டிசன்கள், “இந்தியாவில் 45 முதல் 48 டிகிரி வரை கோடை வெயில் அடித்தாலும் நம் நாட்டுப் பொருட்கள் நன்றாகவே உள்ளன; ஆனால் 36 டிகிரிக்கே ஐரோப்பிய பொருட்கள் உருகுகின்றனவா?” என்றும், “41 டிகிரி என்பது டெல்லியில் சாதாரண வெப்பநிலை, அதைவிட அதிக வெப்பத்தை இந்தியர்கள் சாதாரணமாகக் கடந்து விடுகிறார்கள்” என்றும் கிண்டலாகவும் ஆச்சரியத்துடனும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தியர்களின் இந்த ஒப்பீட்டிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணத்தை காலநிலை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலான கட்டிடங்கள், போக்குவரத்து அமைப்புகள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் அனைத்தும் கடுமையான குளிர எதிர்கொள்ளும் வகையிலேயே (Insulated) வடிவமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள வீடுகளில் ஏசி (AC) அல்லது மின்விசிறிகள் போன்ற குளிரூட்டும் வசதிகள் பெருமளவில் இருப்பதில்லை. எனவே, திடீரென ஏற்படும் இத்தகைய கடுமையான வெப்பநிலையைத் தாங்கும் வகையில் அவர்களின் உள்கட்டமைப்பு இல்லாததே, ஐரோப்பிய நாடுகள் இந்த அளவிற்கு திணறுவதற்குக் முதன்மைக் காரணமாகும்.
சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள் நகைச்சுவை நோக்கில் பகிரப்பட்டாலும், காலநிலை மாற்றத்தின் (Climate Change) தீவிரமான தாக்கம் ஐரோப்பாவில் ஒரு ஆபத்தான பொது சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலக வெப்பமயமாதல் காரணமாக எதிர்காலத்தில் இதுபோன்ற கடுமையான வெப்ப அலைகள் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, வெறும் குளிர்காலத்தை மட்டுமே நம்பி வடிவமைக்கப்பட்ட தங்களின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டிட வசதிகளை, இனிவரும் காலங்களில் கடுமையான கோடை வெப்பத்தையும் தாங்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் மேம்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.
