தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் குளித்த ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஜாபர் என்பவரின் மனைவி பரிதாள் பீவி (51). இவர் சனிக்கிழமை அன்று தனது சகோதரி சபுராளுடன் குற்றாலம் அருவிக்குச் சுற்றுலா வந்துள்ளார்.
குற்றாலம் பேரருவியில் பரிதாள் பீவி உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்குக் கடுமையான குளிரும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அருவியிலிருந்து வெளியே வந்த அவர், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு உடனடியாக தென்காசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பரிதாள் பீவி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த குற்றாலம் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பரிதாள் பீவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
