எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், சசிகலாவை நேரில் சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் எடப்பாடியை வீழ்க்கும் நோக்கில் தங்களுடன் கைகோர்க்குமாறு எஸ்.பி.வேலுமணி தரப்பு விடுத்த அழைப்பை “மறுபடியும் ஒரு கலகத்துக்கு நான் தயாரில்லை” என சசிகலா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த புதிய சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற அரசியல் நகர்வின் அடிப்படையில், சசிகலாவின் ஆதரவைப் பெறவே எடப்பாடி பழனிசாமி தனது மகன் மூலம் இந்தத் தூதை அனுப்பியிருப்பதாகப் பேசப்படுகிறது. உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தொடர் அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே, எடப்பாடியின் இந்த சமரசக் கரத்தை ஏற்றுக்கொண்டு சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் களம் காண்பாரா அல்லது நடுநிலை வகிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் இடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
