தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நாட்கள் கடந்த நிலையிலும், அரசியல் களம் இன்னும் தணியாத பரபரப்புடன் காணப்படுகிறது. தேர்தலில் எதிர்பாராத திருப்பமாக திமுக கூட்டணி உடைந்து, காங்கிரஸ், விசிக, மற்றும் ஐயூஎம்எல் (IUML) ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் பங்கெடுத்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக ஆட்சி அமைக்க தங்களின் ஆதரவை வழங்கியுள்ளன. மக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பதை தடுப்பதற்காகப் பின்னணியில் பல்வேறு அரசியல் காய்நகர்த்தல்கள் அரங்கேறி வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பாக ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதின் செய்தியாளர்களிடம் பேசிய அதிரடித் தகவல்கள் அரசியல் வட்டாரத்தை உலுக்கியுள்ளன. தவெக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் முதலில் அறிக்கை விட்டாலும், பின்னணியில் வேறு சில திட்டங்கள் அறிவாலயத்தில் தீட்டப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தவெகவை முடக்க, பரம எதிரிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்க்கும் முயற்சிகள் நடந்ததாகக் கூறி, தமிழக அரசியலின் உச்சக்கட்ட ரகசியத்தை அவர் உடைத்துள்ளார்.
காதர் மொகிதின் கூற்றுப்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க திமுக ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக திமுக தரப்பில் கூறப்பட்ட யோசனை தங்களுக்குப் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தீர்ப்புக்கு மாறான இந்த யோசனை புரியாமல் தங்கள் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்ததாகக் கூறினார். இதற்கிடையில், தவெக தரப்பிலிருந்து தங்களுக்கு நேரடியாக வந்து அமைச்சர்கள் மட்டத்தில் அழுத்தம் கொடுத்து ஆதரவு கோரியதாகவும், கேரளாவில் உள்ள தங்கள் கட்சித் தலைவர்களும் விஜய்க்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் விவரித்தார்.
இறுதியாக, இந்த குழப்பங்களுக்கு விடைதேடி மீண்டும் அறிவாலயம் சென்றபோது, அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு மாற்றாக விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கும் அடுத்தகட்ட யோசனை திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. “அவர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரே இல்லையே” என்று காதர் மொகிதின் கேள்வி எழுப்பியதற்கு, அடுத்த 6 மாதங்களுக்குள் அவரை எம்.எல்.ஏ ஆக்கிவிடலாம் என திமுக பதில் அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் திருமாவளவன் ஆகிய இருவரையும் முன்னிறுத்தி திமுக செய்த இந்த முயற்சிகள் அனைத்தும், மக்கள் அளித்த வாக்குக்கு துரோகம் இழைக்கும் “ஜனநாயக விரோதச் செயல்” என்று காதர் மொகிதின் கடுமையாகச் சாடியுள்ளார்.
