சசிகலா காலில் விழுந்தது குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு எடப்பாடி பழனிசாமி (EPS) தற்போது அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்திய பேட்டியில் இது குறித்துப் பேசிய அவர், பெரியவர்களிடம் ஆசி பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும், ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின் காலில் வயதான திமுக நிர்வாகிகள் விழுவதைப் போல தான் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
தன் மீது அரசியல் ரீதியாக எந்தக் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாத காரணத்தினாலேயே, பழைய புகைப்படங்களைத் தூசு தட்டி திமுகவினர் பிரசாரங்களில் காட்டி வருவதாக அவர் விமர்சித்தார். உதயநிதி ஸ்டாலின் தனது பிரசார மேடைகளில் ஈபிஎஸ் காலில் விழும் புகைப்படத்தை அடிக்கடி பயன்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக “சுயமரியாதை” குறித்த இந்த விவாதத்தை எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்துள்ளார்.
