தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மற்றும் அதன் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துச் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கும் கட்சி என்றும், அதிமுக மட்டுமே மக்களுக்கான இயக்கம் என்றும் சாடினார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் பயன்படுத்துவதற்குப் பதிலடி தரும் வகையில், பழைய செய்தித்தாள்களை ஆதாரமாகக் காட்டி திமுகவின் இரட்டை நிலையை அவர் அம்பலப்படுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, நரேந்திர மோடியின் குஜராத் ஆட்சியைப் பாராட்டிய பழைய செய்திகளைத் தொண்டர்களிடம் காட்டிய எடப்பாடி பழனிசாமி, “அன்று உங்கள் தாத்தா (கருணாநிதி) பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அது மதவாதக் கட்சியாகத் தெரியவில்லையா?” என்று உதயநிதி ஸ்டாலினை நோக்கிக் கேள்வி எழுப்பினார். சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே திமுக தற்போது நாடகமாடுவதாகவும், முரசொலி மாறன் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தது பாஜகவுடனான கூட்டணியால்தான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதிமுகவை ‘டெல்லிக்கு அடிமை’ என்று விமர்சிக்கும் ஸ்டாலினுக்கு, மக்கள் பிரச்சனைகளை விட கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, குறிப்பாகக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதே குற்றங்கள் பெருகக் காரணம் என்றார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் கஞ்சா புழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். மேலும், செல்வந்தராக வளர்ந்த ஸ்டாலினுக்கு ஏழைகளின் வலி தெரியாது என்றும், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த தமக்கு மக்களின் வறுமை நன்கு தெரியும் என்றும் கூறி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பங்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அதிரடி வாக்குறுதியையும் அளித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மற்றும் குடிமராமத்து திட்டங்கள் திமுக அரசால் முடக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆட்சி மாற்றத்திற்குப் பின் இத்திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறும் என்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் மருத்துவர்களாகி வருவதை அதிமுகவின் சாதனையாக முன்வைத்தார். திமுகவின் ‘கூப்பன்’ திட்டங்களை ஊழலுக்கான வழிமுறை என்று சாடிய அவர், அதிமுகவின் வெற்றி தமிழகத்தின் விடியலுக்கான தொடக்கம் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.
