2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக (ராமதாஸ்) தரப்பு எம்.எல்.ஏ அருள் இன்று (பிப். 17) சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக பிரிவு, அதிமுக – பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் தரப்பு ஆதரவாளரான அருளின் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சமீபகாலமாக பாமகவின் இரு தரப்பினருக்கும் இடையே கூட்டணி தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், ராமதாஸ் தரப்பும் அதிமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைய வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிமுக மற்றும் பாமகவின் இரு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாக, வரும் நாட்களில் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி உறுதி குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
