அதிமுகவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு வெடித்த உட்கட்சி மோதல் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்தாலும், அதன் பின்னணியில் நடந்த அதிகாரப் போட்டி தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச்செயலாளராக கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கைப்பற்றிய பிறகு, அவரது அரசியல் நகர்வுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் அனைவரையும் அரவணைத்துச் சென்ற அவர், காலப்போக்கில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் தீவிரமானார். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவரான எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்தபோது, “கட்சியின் முடிவை நான் மட்டுமே எடுப்பேன்” என்பதில் இபிஎஸ் உறுதியாக நின்றதே இந்த மோதலின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
தன்னை எதிர்த்த இரண்டாம்கட்ட தலைவர்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக முடக்க எடப்பாடி பழனிசாமி கையாண்ட “இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்” என்ற புதிய திட்டம் கட்சியின் அதிகாரப் பரவலை தலைகீழாக மாற்றியது. இதன் மூலம், மாவட்ட அளவில் பல ஆண்டுகளாக கோலோச்சி வந்த முன்னாள் அமைச்சர்களின் தனிப்பட்ட செல்வாக்கு உடைக்கப்பட்டு, இபிஎஸ்-க்கு நெருக்கமான புதிய நிர்வாகிகள் வளர்க்கப்பட்டனர். தங்களின் செல்வாக்கை குறைக்கவே திட்டமிட்டு இது செய்யப்படுவதாக அதிருப்தியடைந்த மூத்த தலைவர்கள், தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்து, 2026 தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பின்னடைவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இபிஎஸ்-க்கு எதிராக ஒன்றிணையத் தொடங்கினர்.
எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதன் உச்சகட்டமாக, சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்த விவகாரம் உட்கட்சிப் போரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இபிஎஸ்-இன் தலைமைக்கே ஆபத்து என்று கணிக்கப்பட்ட அந்த இக்கட்டான சூழலில், அவர் எடுத்த அதிரடி தகுதி நீக்க நடவடிக்கைகளும், பதவிகள் பறிப்பும் அதிருப்தி குழுவினரை நிலைகுலையச் செய்தது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடி மற்றும் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சம் காரணமாக, வேலுமணி அணியினர் வேறு வழியின்றி மீண்டும் இபிஎஸ் உடன் சமாதானம் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தற்போது எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் இபிஎஸ் தலைமையின் கீழ் வந்துவிட்டதால், அதிமுகவில் இரண்டாம்கட்ட தலைவர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இனி அவர்கள் ஒன்றிணைந்தாலும் முன்பு போல கட்சிக்குள் அதிகாரம் செலுத்த முடியாது என்றும், முடிவெடுக்கும் அதிகாரம் முழுமையாக இபிஎஸ் கையிலேயே இருக்கும் என்றும் அவரது ஆதரவாளர்கள் மார்புதட்டுகின்றனர். இருப்பினும், சி.வி. சண்முகம் போன்ற ஒருசில முக்கிய தலைவர்கள் இன்னும் முழுமையாக சமாதானமாகாத நிலையில், இந்த அமைதி அதிமுகவிற்குள் ஏற்பட்ட உண்மையான ஒற்றுமையா அல்லது அடுத்த புயலுக்கான தற்காலிக அமைதியா என்ற கேள்வி அரசியல் களத்தில் இன்னும் மிஞ்சியே நிற்கிறது.
