தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த உருப்படியான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக அரசு விளம்பரத்திற்காக மட்டுமே திட்டங்களை அறிவிப்பதாகவும், களத்தில் மக்கள் நலன் சார்ந்த பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த தேர்தலில் அளித்த 525 வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை என்று சாடியுள்ள எடப்பாடி பழனிசாமி, திமுகவின் ஆட்சியை “உருட்டுக்கடை அல்வா” என்று கிண்டல் செய்துள்ளார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி வருவதாகவும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப கவர்ச்சிகரமான பெயர்களில் ஏமாற்று வேலைகள் நடப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் (திமுக 2.0) என்று கூறுவதை எள்ளிநகையாடியுள்ள அவர், ஸ்டாலின் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருவதாக விமர்சித்தார். “பேஸ்மென்ட் வீக் – பில்டிங் ஸ்டிராங்” என்ற வடிவேலு நகைச்சுவை போல திமுகவின் ஆட்சி ஊசலாடிக் கொண்டிருப்பதாகவும், தேர்தல் முடிவுகள் வரும்போது ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல, வெறும் ‘0’ தான் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இறுதியாக, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக திமுக செய்துள்ள சாதனைகளை மக்களிடம் வெளிப்படையாகத் தெரிவித்து வாக்கு கேட்க ஸ்டாலின் தயாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் களத்தில் திமுகவின் இந்த “ஏமாற்று மாடல்” ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஆவலோடு காத்திருப்பதாகவும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து மக்களின் குறைகளைத் தீர்க்கும் என்றும் அவர் தனது அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
