தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அதிமுக – திமுக கூட்டணி விவகாரத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சேலம் ஓமலூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகக் கூறப்படும் செய்திகள் யாவும் வெறும் கட்டுக்கதை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீதும் அதிமுக மீதும் திட்டமிட்டு பரப்பப்படும் இத்தகைய அவதூறுகளுக்கு அவர் இதன்மூலம் தகுந்த விளக்கமளித்துள்ளார்.
அதே கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய்யை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துப் பேசினார். கரூரில் பேசிய முதல்வர் விஜய், திமுக மற்றும் அதிமுகவை “கூட்டு களவாணிகள்” என்று சாடியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை வளைத்து, தனது கட்சியில் இணைத்துக் கொள்ள திட்டமிடும் முதல்வர் விஜய்தான் உண்மையான “களவாணி” என்று சாடினார். மேலும், விஜய்யின் பேச்சு ஒரு நாலாந்தர பேச்சாளரின் பேச்சு போல தரம் தாழ்ந்து இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தலுக்கு முன்பு இரண்டு திராவிடக் கட்சிகளும் சரியில்லை என்று கூறி, தான் ஒரு மாற்றுச் சக்தி என முழங்கிய விஜய், தற்போது திராவிடக் கட்சியுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சியையே பிடித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். இதன்மூலம் விஜய் இரட்டை வேடம் போடுகிறாரா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். மேலும், 60 நாட்களைக் கடந்த தவெக ஆட்சியில் மக்கள் நலனுக்காக எந்தவொரு ஆக்கப்பூர்வமான வேலையும் நடக்கவில்லை என்றும், வெறும் “பஞ்ச் டயலாக்” பேசி விளம்பர ஷோக்கள் மட்டுமே நடத்தப்படுவதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கித்தான் விஜய்யின் முதல்வர் நாற்காலி தப்பிப் பிழைத்திருக்கிறது என்றும் விமர்சித்தார்.
இறுதியாக, தவெக ஆட்சிக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியின் கொள்கை குறித்தும் எடப்பாடி பழனிசாமி கடுமையாகக் கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, பின்னர் தவெக-வுக்குச் சென்று பதவி வாங்கியதுதான் காங்கிரஸின் கொள்கையா என்று சாடினார். ஒரு காலத்தில் செல்வாக்கோடு இருந்த காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை “கழுதை தேய்ந்து கட்டெறும்பான” கதையாகிவிட்டது என்றும், நூற்றாண்டு கண்ட பேரியக்கம் இன்று பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
