யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

By Swetha on ஆனி 4, 2026

Spread the love

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “தூய சக்தி” என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் இந்த ஆட்சியில், இத்தகைய முக்கிய ஆவணங்கள் மாயமாகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்துறையின் இந்த திருட்டுச் சம்பவம் சாதாரணமான ஒன்றாகத் தெரியவில்லை என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, “நடு இரவில் திருடர்கள் வந்து திருட, இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏதோ ஒரு பெரிய உள்நோக்கம் இருப்பதாகவும், தவறு செய்த யாரையோ காப்பாற்றுவதற்காகவே இந்த சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டு இருப்பதாகவும் அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

   

“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த விவகாரத்தில் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் அனைத்தும் வெளிவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எனவே, மின்துறை தலைமை அலுவலகத்தில் நடந்துள்ள இந்த ஹார்ட் டிஸ்க் திருட்டு சம்பவம் குறித்து முறையான சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.