அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாம்களுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அவர்களின் ஆட்சிக்கால ஊழல் ஆவணங்களை டெல்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் திட்டப்பணிகளில் நடந்த ஊழல்கள் குறித்த ரகசிய ஆவணங்களை அவர் சேகரித்து வைத்துள்ளதாகவும், குறிப்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான வலுவான கோப்புகள் இதில் அடங்கும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரடியாகத் தங்களின் பெயரைப் பயன்படுத்தாமல், சில சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் மூலமாக நீதிமன்றங்களில் இவர்கள் மீது வழக்கு தொடுத்து சட்ட ரீதியான முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தவும் இபிஎஸ் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
