ஆந்திரப் பிரதேசத்தில் அன்னமய்யா மாவட்டம் அருகே பேருந்தை நிறுத்த மறுத்த காரணத்திற்காக, ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்து ஓட்டுநர் ஒருவரைச் சிலர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து கடிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் பயணித்த இளைஞர்கள் சிலர், வழியில் உள்ள மத்தையகரி பள்ளி என்ற இடத்தில் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கோரியுள்ளனர்.
இருப்பினும், குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தம் இல்லாததால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்த மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், பேருந்திலிருந்து இறங்கிய பிறகு இருசக்கர வாகனங்களில் பேருந்தைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளனர். பின்னர் பேருந்தை மறித்து, ஓட்டுநரை வலுக்கட்டாயமாக கீழே இழுத்து வந்து கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
https://twitter.com/TeluguScribe/status/2115707490931540265/video/1
இச்சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விஸ்வநாத், ராமு மற்றும் மதுகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
