தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறைகளில் நிலவி வந்த வருவாய் இழப்புகளைத் தடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசினார். கடந்த காலங்களில் “கட்சி நிதி” என்ற பெயரில் மாதந்தோறும் சட்டவிரோதமாகத் திசைதிருப்பப்பட்டு வந்த சுமார் ₹102 கோடி தொகை முற்றிலும் தடுக்கப்பட்டு, நேரடியாக அரசு கஜானாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் கொள்முதல் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய அதிரடித் திட்டம் மூலம் ஆண்டுக்குச் சுமார் ₹1,500 கோடி வரை அரசுப் பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த கால ஆட்சிகளில், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் குறிப்பிட்ட மதுபான வகைகளுக்கு மக்களிடம் தேவை இருக்கிறதா இல்லையா என்பதை ஆராயாமல், ஆண்டுக்குச் சுமார் ₹1,500 கோடி மதிப்பிலான தேவையற்ற மதுபானங்கள் அவசர அவசரமாகக் கொள்முதல் செய்யப்பட்டு அரசு குடோன்களில் முடக்கப்பட்டன. ஆளும் தரப்பிற்கு நெருக்கமான சில குறிப்பிட்ட மதுபான ஆலைகளிடம் இருந்து ஒரு பெட்டிக்கு இவ்வளவு ரூபாய் என்று பெரிய தொகையைக் கமிஷனாகப் பெற்றுக் கொண்டு, தரம் குறைந்த மதுபானங்களை டன் கணக்கில் கொள்முதல் செய்து வந்த அதிர்ச்சிப் பின்னணி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த மறைமுகக் கமிஷன் நெட்வொர்க்கை முற்றிலும் உடைக்கும் விதமாக, முதலமைச்சர் விஜய் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் ஆகியோர் டாஸ்மாக் நிர்வாகத்திற்குப் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். அதன்படி, நுகர்வோரின் தேவை மற்றும் மக்களிடம் அதிக டிமாண்ட் உள்ள பிராண்டுகளை மட்டுமே பட்டியலிட்டு ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மதுபான உற்பத்தி ஆலைகளின் நிர்வாகிகளை நேரில் அழைத்து, அரசுக்கு விற்பனை செய்ய யாருக்கும் ஒரு பைசா கூட கமிஷன் கொடுக்கத் தேவையில்லை என்றும், ஆனால் மதுபானங்களின் தரத்தில் எவ்வித சமரசமும் இன்றி முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் கறாராகக் கூறியுள்ளனர். தவெக அரசின் இந்தத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை கமிஷன் ஏஜெண்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு, அரசின் பொதுக் கஜானாவிற்குப் பல நூறு கோடிகளை மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளது.
